“பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணிந்துவர தடை இல்லை” - பெரியார் பல்கலைக்கழகம் அறிக்கை

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடையை நீக்கியுள்ளதாக பெரியார் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று நண்பகல் 12:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழா பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். விழாவின் சிறப்பாக முது முனைவர் பட்டம் நான்கு பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 505 பேருக்கும், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 பேருக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களையும் விழா மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்.

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்PT

இந்தநிலையில், ஆளுநர் கலந்து கொள்ளும் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சேலம் மாநகர காவல்துறை அதிகாரிகள் நேற்று பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் செய்தனர். அப்போது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவிற்கு வரும் மாணவ மாணவியர் உள்ளிட்ட அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

சம்பந்தப்பட்ட அறிக்கை, இங்கே:

‘கருப்பு உடை கூடாது’ என்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் அறிக்கை
‘கருப்பு உடை கூடாது’ என்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் அறிக்கை

சேலம் மாநகராட்சி காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் தடை நீக்கம்!

பல்கலைக்கழகத்தின் இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது மட்டுமில்லாமல் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றறிக்கை திரும்ப பெறப்படுவதாக பெரியார் பல்கலைக்கழகம் மற்றொரு அறிக்கை வழியாக தகவல் வெளியிட்டுள்ளது. அதில் சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் தங்களின் முந்தைய அறிக்கை திரும்பப்பெறப்படுவதாக பல்கலைக்கழகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த புதிய அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்PT

அந்த அறிக்கையில், “பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ஆளுநர் ரவி தலைமையில் 28.06.2023 நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத ஆடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யும்மாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும், சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் நேற்று சுற்றறிக்கை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்ப பெற்று கொள்ளப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன்” என பதிவாளர் தங்கவேலு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இதனால், கருப்பு நிற உடை தொடர்பான பிரச்னைக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com