"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி
செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது....
பெரியார் எத்தனை முறை சிறை சென்றாலும் ஒருமுறை கூட மன்னிப்புக் கேட்டதில்லை:
திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்குமானது. அதனை உடைக்கவேண்டும் என நினைப்பவர்களே நமக்கு எதிராக நிற்கிறார்கள். பெரியார் மக்களுக்காக போராடி எத்தனை முறை சிறை சென்றாலும் ஒரு முறை கூட கோர்ட்டில் மன்னிப்பு கேட்காதவர். தண்டனையை தாருங்கள் ஆனால் நான் செய்தது தவறல்ல என கர்ஜித்தவர் பெரியார். பணம் தந்தாலும் தராவிட்டாலும் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையில் கைழுத்து போடாது என கூறியவர் தமிழக முதல்வர்.
மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் கை கட்டி ஆதரித்தது அதிமுக:
டங்க்ஸ்டன் திட்டம் திமுக முயற்சியால் கைவிடப்பட்டுள்ளது இந்த திட்டம் வர காரணமாக அந்த திட்டம் குறித்த மசோதாவை ஆதரித்தது அதிமுக. அவர்கள் இதுபற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை. மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் கை கட்டி ஆதரித்தது அதிமுக அரசு. சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே எடப்பாடி வருவார் பின்னர் எங்கு போவார் என தெரியாது இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
ஆளுநர் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்:
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகரான தகுதியான பெயர் சொல்லக் கூடிய தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. மாறாக தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தமிழகத்திற்கு பொழுது போக்கிற்காக ஒரு ஆளுநர் இருந்து வருகிறார். அவர் ஆளுநராக இல்லை அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.
மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. தமிழ் மொழியையும் தமிழக மக்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுகின்ற கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலில் திமுக உள்ளது" என்று எம்.பி கனிமொழி பேசினார்.