\
Book Purchase Scam
Book Purchase Scampt web

கோவை பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் முறைகேடு வழக்கு: 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
Published on: 

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை செய்து வருகின்றனர்.

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடம் இருந்து அதிக விலைக்கு தரமற்ற நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், சில நூல்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள், தவறான தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சிந்தை இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

நூல்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் ஆசிரியர்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு பதிப்பகத்தின் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட நூல்கள் நூலகத்திலிருந்து அகற்றப்பட்டன. இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த 11 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட பணம், காசோலைப் பரிவர்த்தனைகள், கணக்கு பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் சேகரித்தனர். மேலும், நூல்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்தவர்கள் யார்? எத்தனை நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன? அவற்றுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி 60,266 நூல்களைக் கொள்முதல் செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நூல்களின் உண்மையான மதிப்பு? நிர்ணயிக்கப்பட்ட விலை? கொள்முதல் நடைமுறைகள் மற்றும் அரசுப் பணம் முறையாகச் செலவிடப்பட்டதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்து வருகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, முறைகேடு புகார் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும், அகல்விளக்கு பதிப்பகம், அதன் உரிமையாளர் மோகன் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நூல் கொள்முதல் முறைகேட்டில் தொடர்புடைய பதிப்பகத்தினர், அதிகாரிகள் மற்றும் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் அகல்விளக்கு பதிப்பகம் உட்பட ஏழு இடங்களில் தற்போது தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அகல் விளக்கு உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி முத்துராஜ் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோவை பெரியார் அறிவுலகம், தென்காசி நூலகம் உட்பட ஏழு இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. சோதனையின் நிறைவுக்குப் பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.