பெரியகுளம் | ஏடிஎம் மிஷினில் மொத்தமாக இருந்த பணம்.. போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்த நண்பர்கள்!
செய்தியாளர்: அருளானந்தம்
தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் அனுமார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் மற்றும் அவரது நண்பர் தங்கபாண்டி. இருவரும் பணம் எடுப்பதற்காக பெரியகுளம் தென்கரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சி செய்தபோது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கனவே யாரோ விட்டுச் சென்ற பணத்தை பார்த்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக அந்தப் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தபோது 47 ஆயிரத்து 500 ரூபாய் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்த போது எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், இருவரும் பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெரியகுளம் குருசடி தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மாமியாரின் மருத்துவச் செலவுக்காக ஏடிஎம் மூலம் பணம் அனுப்பிய நிலையில், எண்டர் பட்டனை சரியாக அழுத்தாததால் பணம் செல்லாமல் ஏடிஎம் இயந்திரத்திலேயே இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணத்தை ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பணத்தை காவல்துறையினிடம் ஒப்படைத்த இருவருக்கும் காவல்துறை சார்பாக சால்வை அணிவித்த துணை கண்காணிப்பாளர் நல்லு பாராட்டினார்.