``அண்ணன் இல்லையென்றால் இது சாத்தியமில்லை”- வைகோவுக்கு பேரறிவாளன் நெகிழ்ச்சியுடன் நன்றி

``அண்ணன் இல்லையென்றால் இது சாத்தியமில்லை”- வைகோவுக்கு பேரறிவாளன் நெகிழ்ச்சியுடன் நன்றி
``அண்ணன் இல்லையென்றால் இது சாத்தியமில்லை”- வைகோவுக்கு பேரறிவாளன் நெகிழ்ச்சியுடன் நன்றி

சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார் பேரறிவாளன். இந்த சந்திப்பின்போது மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

வைகோ அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு துரை வைகோவிடம் பேசிக்கொண்டிருந்த பேரறிவாளன், வைகோ பொடோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் ஒன்றாக இருந்த சமயத்தில் தாங்கள் இருவரும் வாலிபால் போட்டியில் பங்கெடுத்தது குறித்து பேசினார். “வைகோ, வாலிபால் விளையாட்டில் போடும் சர்வீஸ்கள் கடுமையாக இருக்கும்” என்றும் வைகோ குறித்து பெருமிதம் கூறினார். தொடர்ந்து வைகோ வருகைக்கு பிறகு ராம்ஜெத்மலானி வழக்கில் வாதாடிய தருணத்தை நினைவுகூர்ந்தார்.

பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேரறிவாளன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைகோ பேசுகையில், “இன்று இவரை விடுதலையான பேரறிவாளனாக நான் பார்க்கிறேன். இந்த சம்பவத்திற்கு முன்பும் பேரறிவாளன் எனது வீட்டிற்கு வருவார். நல்ல ஈழ உணர்வாளர். அவர் நிரபராதி, குற்றமற்றவர். தமிழக அரசின் உத்தரவை ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார். கடைசியில் உச்சநீதிமன்றம் இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 142ஐ பயன்படுத்தி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இருந்தாலும் அவருடைய இளமை காலம், வசந்த காலம் எல்லாம் அழிந்து விட்டது.

இருந்தபோதிலும் அவரது தாயார் அற்புதம்மாள் மிகப்பெரிய வீராங்கனையாக இருந்து போராடி தன் மகனுக்கு விடுதலை பெற்று தந்துள்ளார். அவர் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் சோர்ந்து விடுவார்கள் அல்லது விட்டு விடுவார்கள். ஆனால் அவர் போராடி எமன் வாயில் இருந்து தன் மகனை மீட்டு கொண்டு வந்துள்ளார். இந்த தீர்ப்பு அடிப்படையிலேயே மற்ற ஆறு பேரும் விடுதலை ஆவார்கள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேரறிவாளன் பேசுகையில், “நீண்ட காலமாகவே அண்ணனை (வைகோவை) எனக்கு தெரியும். சிறைக்கு போவதற்கு முன்பே இவரை இதே வீட்டில் சந்தித்து உள்ளேன். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, சரியக 2000-ம் ஆண்டில் அப்போதைய பாஜக தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் சந்தித்து அண்ணன்தான் எனக்காக மனு கொடுத்தார். மிகப்பெரிய மனித நேய போராளி இவர். எனது வழக்கை பொறுத்தவரை, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் வந்த பிறகு தான் இது பலராலும் கவனிக்கப்பட்டது.

பல மூத்த வழக்கறிஞர்கள், சட்ட அறிஞர்களின் பார்வை இந்த வழக்கை நோக்கி திரும்ப ராம்ஜெத்மலானி தான் காரணம். அவர் இந்த வழக்கில் வர முழு காரணம் வைகோ தான். இவர் இல்லையென்றால் இது சாத்தியம் இல்லை. அதற்காகவே இன்று நான் அண்ணனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். இவையாவும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com