பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் மற்றும் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு ஆகும். தமிழக அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது. இந்த வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 161 -வது பிரிவின் படி அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் போதுமானது" என வாதிட்டார்.

ஆனால் ஒன்றிய அரசின் வழக்கறிஞர், 'இதில் மாநில அரசுக்கு உரிமை இல்லை' என்றும், 'மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தான் முடிவெடுக்க முடியும்' என்றும் வாதிட்டார். அதனைக்கேட்ட நீதிபதிகள், 'நீங்கள் முடிவெடுக்கும் வரை பேரறிவாளன் சிறையில் இருந்தாக வேண்டுமா?' என்று கேள்வியெழுப்பினர். அதற்கு ஒன்றிய அரசின் வழக்கறிஞரால் பதில் அளிக்க முடியவில்லை.

மனிதாபிமான - மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே வேளையில், மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும்.

'மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று நீதிபதிகள் கூறியிருப்பது மிக முக்கியமானது ஆகும். 'ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும்' என்றும் நீதிபதிகள் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் உறுதியாகி இருக்கிறது. இது தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.

இப்போது பேரறிவாளன் விடுதலை ஆகி இருக்கிறார். 31 ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணமாக திகழ்கிறார். பெண்மையின் திண்மையை அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com