பெரம்பலூர்: பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சார் ஆட்சியர் சரமாரி கேள்வி!
செய்தியாளர்: அச்சுதராஜகோபால்
அரும்பாவூர் ஏரி கரையில் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட்ட சார் ஆட்சியர் கோகுல், “கனமழை வருமென்று தெரிந்தும் ஏரியில் உடைப்பு ஏற்படும் வரையில் பொதுப்பணித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்வது?” என பொதுப்பணித்துறையினரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும் “ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்டம் முழுவதும் ஏரிகளில் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்” என சார் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
பெரம்பலூரில் அரும்பாவூர் பெரிய ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதமாகி உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவரிடம் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் தங்களது குறைகளை முறையிட்டனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பார்த்திபனை அழைத்து சரமாரி கேள்வி எழுப்பி கண்டித்தார் சார் ஆட்சியர் கோகுல்.
குறிப்பாக, “ஆண்டுதோறும் பராமரிப்பு பணியினை மேற்கொள்ளாதது ஏன்? கசிவு தொடர்பாக தகவல் வந்த நிலையில் ஏன் நடவடிக்கை இல்லை? கனமழை பெய்து வந்த நிலையில் ஏரியில் உடைப்பு ஏற்படும் வரையில் வேடிக்கை பார்ப்பதா? தற்போது விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்வது?” என அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். தொடர்ந்து உரிய நடவடிக்கையுடன் முறையான விளக்கத்தையும் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.