பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பாலமுருகன் கட்டிடப் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தீபாவுடன் அதே பள்ளியில் பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வரை வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆசிரியை தீபா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் நுழைந்த வெங்கடேசன் தீபாவிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் தீபா பணத்தை ஆசிரியர் வெங்கடேசனிடமே திருப்பி கொடுத்துவிட்டு கோபமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதை வகுப்பறையிலிருந்த மாணவ - மாணவிகள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அன்று மாலை பள்ளி விட்டு தனது காரில் வீடு திரும்பிய ஆசிரியை தீபா மாயமாகியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மனைவியைக் காணவில்லை என்பதால் பாலமுருகன் தனது உறவினர்கள் மற்றும் தீபாவின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். தீபா மாயமான அதே நாளில் அவருடன் பணிபுரிந்து வந்த வெங்கடேசனும் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பாலமுருகன் தனது மனைவி தீபாவை காணவில்லை என வி-களத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போல குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி தனது கணவரைக் காணவில்லை எனப் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே தீபாவின் கணவர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இயங்கும் CCTV கேமிரா பதிவுகளைச் சோதனை செய்துள்ளனர். அப்போது திருச்சி சமயபுரம் டோல், மற்றும் மதுரை, தேனி, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட சாலைகளில் தீபாவின் காரில் வெங்கடேசன் மட்டும் தனியாகப் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காணாமல் போன கார் கோவை, உக்கடம் பகுதியில் 3 நாட்களாகக் கிடப்பதாகத் தினங்களாக நிற்பதாக தீபாவின் கணவர் பாலமுருகனுக்குத் தகவல் வந்துள்ளது.
பின்னர் இது குறித்து பாலமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து என்ற போலீசார் காரை சோதனை செய்ததில், காரில் உள்ள இருக்கை முழுவதும் இரத்தம் உறைந்து காணப்பட்டது. காரின் இருக்கைக்குக் கீழே அருந்த நிலையில் தீபாவின் தாலிக்காசு மற்றும் தாலிக்குண்டு கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காரின் பின்புற டிக்கியை திறந்து பார்த்த பொது அதில் புதிதாக வாங்கிய கத்தி, ரத்த கறையுடன் கூடிய சுத்தியல் இருந்தது கண்டுபிடித்தனர்.
இதனைப் பார்த்த போலீசார் ஒரு வேளை தீபா கொல்லப்பட்டிருக்கலாம்? என்ற கோணத்தில் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் சம்பவ இடத்தை சோதனை செய்தனர்.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவிக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து வெங்கடேசன் மற்றும் தீபா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபா கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர் காணாமல் போன நிலையில் அவருடைய காரில் ரத்தக்கறை படிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.