பெரம்பலூர்: 6 பேர் சென்ற இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம், கார் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி பரமேஸ்வரி. இவர் அவரது குழந்தைகளான செந்நிலவன் (3), தமிழ்நிலா (2), உறவினரின் குழந்தை நந்திதா (2), மற்றும் அவரது அம்மா தனம், சகோதரர் சக்திவேல் ஆகிய ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் கொளப்பாடியில் இருந்து வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர்கள் கள்ளங்காடு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட பரமேஸ்வரி, அவரது குழந்தை செந்நிலா, உறவினரின் குழந்தை நந்திதா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்த பரமேஸ்வரியின் அம்மா தனம், தம்பி சக்திவேல், மற்றொரு குழந்தை தமிழ்நிலா ஆகிய மூன்று பேரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரமேஸ்வரியின் அம்மா தனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சக்திவேல், குழந்தை தமிழ் நிலா ஆகியோர் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பரமேஸ்வரியின் தம்பி சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை தமிழ் நிலாவிற்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டுனர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஆறு பேரில், இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.