பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம். பிரபாகரனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரனின் உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவை கூட்டத்தின்போது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.