பெரம்பலூர்: காதலித்து ஏமாற்றிய காதலனை காவல் நிலையத்தில் கரம்பிடித்த இளம்பெண்
இளம்பெண் அளித்த புகாரின்பேரில் தலைமறைவான வாலிபரை பிடித்த மாமல்லபுரம் மகளிர் போலீசார் வாலிபரை அப்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த புதுவேட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (32), பி.டெக் படித்துள்ள இவர், செங்கல்பட்டு மாவட்டம் பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தன் நண்பர்களுடன் தங்கி அங்குள்ள தனியார் மருந்து கம்பெனியில் சேல்ஸ் எக்ஸ்சிகியூட் ஆபீசராக வேலை பார்த்து வருகிறார்.
இதே மருந்து கம்பெனியில் கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்த அந்தோணி சலேத் (31) என்ற இளம் பெண்ணும் சூப்பர் வைசராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3½ வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கணவன் மனைவிபோல் நெருக்கமாக ஊர் சுற்றி வந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அந்தோனி சலேத் வீட்டிற்கு அடிக்கடி வந்து , உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்ததை கூறி அப்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து தன் ஊருக்கு சென்று வருவதாக அப்பெண்ணிடம் கூறிவிட்டுச் சென்ற கோபாலகிருஷ்ணன் பின்னர், கேளம்பாக்கம் திரும்பவில்லை. பிறகு அந்தோணி சலேத் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு, கோபாலகிருஷ்ணன் தனது காதலிக்கு தெரியாமல் கள்ளக்குறிச்சியில் ஒரு பெண்ணை பெற்றோர் மூலம் நிச்சயித்து வருகிற மே 25-ஆம் தேதி திருமணம் செய்யவிருந்த தகவல் காதலி அந்தோணி சலேத்துக்கு தெரியவந்தது.
தன்னிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கோபாலகிருஷணன் மீது அந்தோணி சலேத் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை ஏற்ற போலீசார் கள்ளக்குறிச்சியில் தனது நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து மாமல்லபுரம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் ஏமாற்றிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மனம் மாறினார். பிறகு இரு தரப்பு பெற்றோர்கள் முன்னிலையில் மகளிர் போலீசார் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வாழ்த்தி அனுப்பினர்.