தனிமனித இடைவெளி இல்லாமல் திரையரங்குகளா? - எச்சரிக்கும் பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர்

தனிமனித இடைவெளி இல்லாமல் திரையரங்குகளா? - எச்சரிக்கும் பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர்
தனிமனித இடைவெளி இல்லாமல் திரையரங்குகளா? - எச்சரிக்கும் பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர்

திரையரங்கம் போன்ற மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனா தொற்று வெடித்து பரவுவதற்கு நாமே ஏற்பாடு செய்தது போன்றதாகும் என்று பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்திருக்கிறார்

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட செய்தியை பதிவிட்டு, இதுபற்றிய தனது கருத்தினை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், “மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனா தொற்று வெடித்து பரவுவதற்கு நாமே ஏற்பாடு செய்தது போன்றதாகும். இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியிருக்கிறார்

கொரோனாவால் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகளை நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என கட்டுப்பாடு வித்தது. இதனால் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியாகவில்லை. அதன் காரணமாக பார்வையாளர்கள் வருகையும் மிக மிகக் குறைவாக இருந்தது. மேலும் 400-க்கும் அதிகமான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இதனால் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் லலித்குமார், ஜெகதீஷ் உள்ளிட்ட மாஸ்டர் படக்குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக சினிமா துறையின் இழப்பு குறித்து விவாதித்தனர். அத்துடன் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்

 நடிகர் விஜய் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதால் நிச்சயம் அனுமதி கிடைக்கும் என்று திரைத்துறையினர் உற்சாகமடைந்தனர். ஆனால் 31-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் திரையரங்கு இருக்கைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்தாலும் தனி அறிக்கையாக வெளியாகும் என்று தகவல் வெளியானது, இதனால் விஜய் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.

மாஸ்டர் பட குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில், நடிகர் சிம்பு அறிக்கையின் மூலம் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியீட்டு, 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது, இதனால் திரைத்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர், அத்துடன் பலரும் அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாகும் மாஸ்டர், ஈஸ்வரன் படக்குழுவினர் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். அதில் மாஸ்டர் திரைப்படம் 850 திரையரங்குகளிலும், ஈஸ்வரன் படம் 300 திரையரங்குகளிலும் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com