கிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..!
தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளநிலையில், கிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர் கலந்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு சுப்பிரமணி நகர் ஏரிக்கரை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடுமையான வறட்சி காரணமாக 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் கிடைக்கும் நிலையில், நேற்று முதல் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கழிவுநீர் கலந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த தண்ணீரை பயன்படுத்தமுடியாத நிலை உள்ளதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமியிடம் கேட்டபோது, சம்பவ பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யப்படும் என்றும் கழிவு நீர் கலப்பது உறுதியானால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.