சுனாமி நினைவு தினம்
சுனாமி நினைவு தினம்புதியதலைமுறை

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: கன்னியாகுமரியில் மக்கள் அஞ்சலி

கன்னியாகுமரியில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் 1,147 நபர்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூர்ந்து, குமரியில் பல்வேறு பகுதிகளில் மவுன பவனி நடத்தினர்.
Published on

தமிழ்நாட்டில் இன்று 20 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் டிச. 26, 2004-ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை, 1,147 பேரின் உயிரைப் பறித்தது. அவர்களின் நினைவாக குமரியில் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்று மவுன பவனி நடத்தினர். மேலும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இத்துடன், உயிரிழந்த நபர்களை அடக்கம் செய்த பகுதியில் சிறப்பு ஆராதனை நடத்தி நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர் குமரி மக்கள்.

ஆழிப்பேரலையின் தாக்கம்

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று கன்னியாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் உட்பட பல்வேறு கடற்கரை பகுதிகளில் சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. இதில் மாவட்டம் முழுவதுமாக 1,147 பேர் உயிரிழந்தனர்.

நினைவு தினம்

20 ஆவது நினைவு தினமான இன்று, 199 பேர் உயிரிழந்த கொட்டிபாடு எனும் சிறு மீனவ கிராமத்தில் உயிரிழந்த மீனவர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கொட்டிபாடு சுனாமி மண்டபம் முன்பு இருந்து மவுன ஊர்வலமாக கொட்டில்பாடு புனித அல்லேசியர் ஆலயத்திற்கு சென்று, அங்கு சிறப்பு திருப்பலி நடத்தினர்.

அங்கிருந்து கொட்டில்பாடு பகுதியில் உயிரிழந்த 199 பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மெழுகுவர்த்தி எரிய வைத்து, பின்பு கொட்டில்பாடு நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தி சுனாமி நினைவு தினத்தை நினைவு கூர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதுபோல் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் 20 ஆவது சுனாமி நினைவு தினத்தை நினைவு கூர்ந்தனர்.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்

இந்த சம்பவத்தில் தனது குடும்பதை இழந்த பீட்டர் என்பவர் பேசுகையில், “சுனாமி வந்த சமயம் எங்கள் குடும்பம் கன்யாக்குமரியில்தான் இருந்தது. நானும் சிலரும் வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்தோம். காலை சுனாமி வந்ததும் எனக்கு செய்தி தெரிய வந்தது. உடனே அங்கே போன போது எங்களால் யாரையும் பார்க்கமுடியவில்லை. தொடர்புக்கொள்ளவும் முடியலை.. மறுநாள் காலையில் நாங்கள் எங்கள் குடும்பத்தினரை சடலமாகவே பார்த்தோம். என் தங்கை அப்போது கர்பிணிப்பெண், அவளுக்கு ஒன்றரை வயது குழந்தையும் இருந்தது. எல்லோருமே சுனாமியில் இறந்துவிட்டார்கள்” என்றார் கண்ணீருடன்.

இவரைப்போல் இன்னும் பலரும் கண்ணீர் மல்க தனது வேதனை சின்னத்தை நினைவுக்கூர்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com