மகாபலிபுர கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்
மகாபலிபுரத்தில் கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், கடலோர பாதுகாப்புக் காவல்நிலையம் அமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கடற்கரை மற்றும் குடைவரை கோயில்கள், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுத்து வருகின்றன. இங்கு, பரந்து விரிந்த கடலில் குளிப்பதையே சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆனால், மாமல்லபுரம் கடற்கரை பகுதி இயற்கையாகவே அபாயகரமான பகுதியாக விளங்குகிறது. கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் எச்சரிக்கை பலகைகளை அமைத்துள்ளனர். எனினும், போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் தீவிர கண்காணிப்பு இன்மை போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தற்போது சுற்றுலா சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் மாமல்லபுரத்துக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால், ஆபத்தான கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்கள் விரைவில் கடற்கரை பகுதியில் அமைந்தால் மட்டுமே இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். 2014 முதல் கடந்த மார்ச் வரை சுமார் 60 பேர் அங்கு பலியாகியுள்ளனர்.