உடையும் நிலையில் மின்கம்பம் - உடனடியாக மாற்ற மக்கள் கோரிக்கை
கொரட்டூரில் இரண்டாக உடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 19 வது தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை பணியின் போது ஜேசிபி மோதியதில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் விரிசல் அடைந்து. இதன் அருகே பள்ளிகள், பூங்காக்கள் காணப்படுவதால் எந்நேரத்தில் உடைந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.
இதனால், மின் கம்பத்தின் அருகே செல்லக் கூட குடியிருப்புவாசிகள் பயந்து வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் விபத்து ஏற்படும் முன், உடைந்த அந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கொரட்டூர் மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது இரண்டு நாட்களில் கம்பம் மாற்றி தரப்படும் என தெரிவித்தார்.