வேங்கைவயல் | மறைந்த மூதாட்டியின் உடலை வைத்துக்கொண்டு மக்கள் போராட்டம் - என்ன நடந்தது?
செய்தியாளர்: முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் கடந்த 20ம் தேதி அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதற்கு விசிக, சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கக் கூடிய மக்கள் அதே பகுதியில் கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியாட்கள் வந்துசெல்ல அனுமதி மறுப்பு..
முன்னதாக இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு 20ம் தேதி வந்தபோது, “வேங்கைவயல் இறையூர் பகுதியை சுற்றி காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது” என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தற்போது அதிகளவிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு ஏதேனும் பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வேங்கைவயல் பகுதிக்கு வெளி ஆட்கள் மற்றும் செய்தியாளர்கள் யாரையும் அனுமதிக்காமல் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக காட்டியுள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளி ராஜாவின் பாட்டி கருப்பாயி வேங்கைவயல் பகுதியில் இன்று உயிரிழந்துள்ளார். ஆனால் அவரது இறப்பில் கலந்து கொள்ள வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
இறுதி நிகழ்வுக்கு வெளியாட்கள் அனுமதிக்கவில்லை என போராட்டம்..
மட்டுமன்றி பாட்டி உயிரிழந்தது தொடர்பாக வெளியாட்கள், வெளியூரில் இருக்கும் சொந்தங்கள் என யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் வேங்கைவயல் பகுதி மக்கள் இறந்த பாட்டியின் உடலை சாலையில் வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, “இறப்புக்கு வருகை தரும் அனைவரையும் உள்ளே அனுமதித்து வருகிறோம். யாரையும் தடுக்கவில்லை. அதனால் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறு” என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மக்கள், பாட்டியின் உடலை வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் நாம் கேட்கையில், “வேங்கைவயலில் மூதாட்டி கருப்பாயி உயிரிழப்புக்கு வருகை தரும் அனைவரையும் அனுமதித்து வருகிறோம். நாளை மதியம்தான் இறந்த மூதாட்டிக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. அதற்குள் இங்கு பிரச்னையை ஏற்படுத்தும்படி வரும் நபர்களைதான் உள்ளே அனுமதிக்கவில்லை. மற்றபடி யாரையும் தடுக்கவில்லை” என்று தெரிவித்தனர்.
அதேநேரம் மூதாட்டி கருப்பாயியின் உயிரிழப்பில் குற்றப்பத்திரிகை தாக்கலில் முதல் குற்றவாளியாக சிபிசிஐடியால் தெரிவிக்கப்பட்டுள்ள வேங்கைவயலைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா இதுவரை பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.