தமிழ்நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு.. முதல்வர் தொகுதியில் போராட்டம்.. முடங்கிய முக்கிய சாலை!
தமிழ்நாட்டில் கோடை இரவுகளில் தொடரும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துவருகின்றனர். முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த கவியரசு கண்ணதாசன் நகர், எம்.ஆர்.நகர், திருவள்ளுவர் நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 11 மணி முதல் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவது பொது மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதியிலும் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவியரசு கண்ணதாசன் நகர், எம்.ஆர்.நகர், திருவள்ளுவர் நகர், விவேகானந்தா நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டது.
இரவு 11 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல, சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் எஸ்.வி.நகர், விஜயலட்சுமிபுரம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், கொரட்டூர், பானு நகர், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று இரவு தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்பத்தூர் - ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள கள்ளிகுப்பம் மின்சார அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த புதூர் போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் மின்சாரம் கிடைக்கும் வரை போராட்டத்தை விடப் போவதில்லை என உறுதியாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில் இரு புறங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு மணி நேரமாக அணிவகுத்து நின்றன. அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கள்ளிகுப்பம் மின்சார அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு மின்சாரம் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு மேலாகியும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பவ இடத்துக்கு வராத நிலையில், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
