சென்னைக்கு அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 4750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த விமான நிலையம் அமைக்க பரந்தூர், கொளத்தூர், ஏகனாபுரம் உள்பட 13 கிராமங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு நிலங்களை கையகப்படுத்தி இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் ஏரி, குளங்கள், நீர்நிலைகள் விளை நிலங்கள் உள்ளன. இந்த நீர் நிலைகளையும் விளை நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க அக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் 264 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக ஏகனாபுரம் கிராம மக்கள் இன்று அதிகாலை முதலே 200-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் நுழையும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் ஏற்கெனவே 5 முறை நடைபெற்ற சேவை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.