விவசாய நிலத்தில் வெடித்த இராணுவ வெடிகுண்டு: மக்கள் பீதி
செங்கல்பட்டு அருகே இராணுவ பயிற்சி முகாமில் இருந்து குறி தவறி விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு விழுந்து வெடித்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அலரியடித்து கொண்டு ஓட்டினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் இராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு இராணுவ பயிற்சிக்காக துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு வெடித்து பயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு வெடிக்கப்படும் வெடிகுண்டுகளில் ஒன்று குறி தவறி அருகிலுள்ள விவசாய நிலத்தில் விழுந்தது. அது விழுந்த வேகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இராணுவ பயிற்சி முகாமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வந்த இராணுவத்தினர் அங்கிருந்த வெடித்த குண்டை எடுத்துச் சென்றனர்.

