தூத்துக்குடி | "வீட்ல ஒரு பொருள் இல்ல, கணவரின் மருந்து கூட தண்ணில போயிடிச்சு"- கண்ணீரில் குடும்பம்!

தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே உள்ள மீனவ கிராமம் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் புதிய தலைமுறை

தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே உள்ள மீனவ கிராமம் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எந்தவித வாழ்வாதரமுமின்றி தேவாலயங்களில் குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்த கிராம மக்கள், அரசு நிவாரணத்துக்காக காத்திருக்கின்றனர்.

தென் மாவட்டங்களில் பெய்து வந்த அதி கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின. அந்த வரிசையில் பார்க்கும் போது பழைய காயல் அருகே உள்ள அன்னை தெரசா நகர், அம்ரோஸ் நகர், தாமஸ் நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட 5 மீனவபகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. இந்த வெள்ள பாதிப்புகளில் அப்பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கிக் கொண்டன. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் உடைமைகளை முழுவதுமாக இழந்த மீனவ மக்களின் வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம்
தென்காசி: ஆதரவு யாருமில்லை.. ஒற்றை உறவான பேத்தியுடன் தவிக்கும் மூதாட்டி.. கண்ணீரை வரவழைக்கும் பேட்டி

நீரின் உயரம் அதிகரிக்கத் தொடங்கியபோது வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், படகுகள் மூலமாக குடியிருந்த பகுதியை விட்டு வெளியேறினர். பழைய காயல் பகுதியில் உள்ள பேராலயங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தங்க வைக்கப்பட்ட மீனவ கிராம மக்கள், எவ்வித தொலைத் தொடர்பும் இன்றி தவித்து வருகின்றனர். பால், உணவு உள்ளிட்டவை இல்லாமல் குழந்தைகளோடு தங்கியிருக்கும் மக்களுக்கு அருகிலுள்ள கப்பல் உரிமையாளர்கள் உணவளித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க பைபர் படகுகள், மீன் வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் வாழ்வாதரத்தை இழந்து நிற்கின்றனர். சில இடங்களில் வெள்ளம் சற்றே வடிந்த நிலையில், அங்குள்ள மீனவ மக்கள் வீடுகளின் நிலையை அறிய தண்ணீரில் நடந்து சென்று அவற்றை வேதனையோடு பார்வையிட்டு திரும்புகின்றனர். மீனவர்களின் இந்த நிலைமையை புதிய தலைமுறை கள ஆய்வு செய்து வெளிகொண்டு வந்துள்ளது.

நம்மிடம் பேசிய சேசுராணி என்ற பெண், “மொத்தமா எல்லாமே அழிஞ்சுப்போச்சு... வீட்ல ஒரு பொருள் கூட இல்ல. ஒரே துணிலதான் இருக்கோம். என் கணவருக்கு ஆபரேஷன் பண்ணி 10 நாள்தான் ஆச்சு. சரியா கவனிச்சுக்கலனா அவ்ளோதான்னு டாக்டர் சொன்னாரு. ஆனா இப்போ எல்லா மாத்திரையும் தண்ணில போய்டுச்சு. எங்களுக்கு ஒரு பச்சப்புள்ள (கைக்குழந்தை) இருக்கு. அந்தக் குழந்தைக்காகதான் நாங்க இன்னும் உயிரோட இருக்கோம்...” என்று கூறி கண்ணீரோடு கூறினார். மனதை உடைக்கும் அவரின் நிலையை போலவே, அப்பகுதியில் பல குடும்பங்கள் அவதிப்படுகின்றன. அரசு அப்பகுதி மக்களுக்கு விரைந்து உதவவேண்டும் என்பது அனைவரின் உடனடி தேவையாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com