சீட்டு கட்டியவர்கள்
சீட்டு கட்டியவர்கள்புதியதலைமுறை

திண்டுக்கல் ‘தீபாவளி சீட்டு’ மோசடி: ரூ 3 கோடி பணத்தை மீட்டுத் தரக்கோரி இருதரப்பு மக்கள் மனு!

தீபாவளி மற்றும் மாதச் சீட்டு நடத்தி ரூ.2 கோடி மற்றும் மற்றொரு சம்பவத்தில் ரூ 1 கோடி மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தரக்கோரி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் இரு தரப்பினர் மனு.
Published on

செய்தியாளர்: காளிராஜன் த

முதல் சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம், கணேஷ் நகர் நந்தவனப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரகதம். இவர் அப்பகுதியில் மாதாந்திர சீட்டு, மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டுள்ளனர்.

இந்நிலையில் பணம் கட்டியவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாகவே பணத்தை திருப்பிக்கொடுக்காமல் மரகதம் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் பணம் குறித்து கேட்டவர்களுக்கு உரிய பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வரவே, அனைவரும் தங்களுக்கு தரவேண்டிய பணம் குறித்து மரகதத்தை கேட்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து தற்பொழுது மரகதம் தலைமறைவாகியுள்ளார்.

இதை அடுத்து சீட்டு கட்டியவர்கள் தங்களின் பணத்தை மீட்டுத்தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 10 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி இன்று புகாரளித்துள்ளனர்.

இரண்டாவது சம்பவம்:

இதே போல், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு, கச்சைகட்டி பகுதியில் வசித்து வரும் தங்கபாண்டி என்பவர் கடந்த 6 வருடங்களாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடமும் 2024 தீபாவளி பண்டிகைக்காக 100க்கும் மேற்பட்டோர் சீட்டுப் பணம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால் தீபாவளிக்கு சீட்டு பணத்தை தங்கப்பாண்டி திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. சீட்டு கட்டியவர்கள் தங்களின் பணம் குறித்து கேட்டதற்கு, டிசம்பர் 5ஆம் தேதி அனைவருக்கும் சீட்டு பணம் வழங்குவதாக கூறியுள்ளார் தங்கபாண்டி. ஆனால் கடந்த ஒரு வார காலமாக தங்கபாண்டியின் தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்துள்ளது. 

இதனால் மக்கள் தங்களின் பணத்தை திரும்பப்பெற அவரைத் தேடி அவர் வீட்டிற்குச் சென்றபோது, தங்கபாண்டி தன் மனைவி விஜயகுமாரி மகன் பிரதீப் மகள் சுமித்ரா ஆகியோருடன் தலைமறைவாகியிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து முப்பதுக்கு மேற்பட்டோர் இன்று  திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, தங்கள் பணத்தை தங்கப்பாண்டியிடமிருந்து மீட்டுத் தரக்கோரி மனு அளித்துள்ளனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com