தடையை மீறி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிக்கையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 15க்கும் அதிகமான காளைகள் தற்காலிக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.இதையடுத்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலூர் அருகே அரிட்டாப்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர், தடையை மீறி கிராம மக்களுடன் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தினர். இதில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் மூலம் காளைகளை அவிழ்த்து விட்டனர். மேலும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு பபுத்தாண்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதேபோல, உசிலம்பட்டி அருகே தடையை மீறி இளைஞர்கள் ஜல்லிகட்டு போட்டியை நடத்தினர். உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனார்குளம், ஒய்யனாம்பட்டி மற்றும் அ.ஆண்டிபட்டி கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களின் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஊரில் உள்ள கண்மாயில் தற்காலிக வாடிவாசல் அமைத்து, காளைகளை போட்டிக்கு தயார் செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் வாடிவாசல் வழியாக காளைகளை விட்டு ஜல்லிக்கட்டு நடத்தினர். மேலூர் அருகே மில்கேட் முனியாண்டி கோவில் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. கோவில் ஜல்லிக்கட்டு காளையை முதலில் அவிழ்த்துவிட்டனர். அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக 30க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
தேனி
தேனி மாவட்டம் கூடலூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. சில காளைகளை வைத்து நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் கூடலூரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி நிகழ்ச்சியை நிறுத்தினர்.