மாஞ்சோலை தோட்ட விவகாரம் | தொழிலாளர்களை முதல்வர் சந்திக்கவில்லை என மக்கள் அதிருப்தி!
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் பணி செய்யும் தொழிலாளர்களை வெளியேற்ற தேயிலைத் தோட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தேயிலை தோட்டத்திற்கான ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், முன்கூட்டியே தொழிலாளர்களை வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதனால் தொழிலாளர்களை வெளியேற நீதிமன்றமும் அறிவுறுத்திய சூழலில் தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரடியாக சென்று கேட்டறிந்து வழங்கியுள்ள நிலையில், மாஞ்சோலை மக்களை இன்று முதல்வர் முக ஸ்டாலின் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால் முதலமைச்சர் முக ஸ்டாலின் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்தித்து பேசவில்லை என அந்த மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி தெரிவிக்கும் மக்கள்..
நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதல்வர் மு.கஸ்டாலின், திருநெல்வேலியில் முடிவுற்ற ரூ.1,679 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.1,061 கோடியில் தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம், வேளாண் & உழவர் நலத் துறை சார்பில் கட்டப்பட்ட ரூ. 77.02 கோடி மெகா உணவு பூங்காவை திறந்துவைத்தார்.
இதற்கிடையில் நெல்லையில் மாஞ்சோலை மக்களை சந்திக்க வர சொல்லிவிட்டு சந்திக்கவில்லை என தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனால் அரசு சுற்றுலா மாளிகை முன்பு தரையில் அமர்ந்து 30க்கு மேற்பட்ட மாஞ்சோலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பத்து பேரை முதல்வரை சந்திக்க அழைத்துச் சென்றனர். ஆனால் உள்ளே சென்றவர்களையும் முதல்வரை சந்திக்க விடவில்லை என மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்ட பணிகளையும் நலத்திட்ட உதவிகளும் வழங்குவதற்காக அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது சுற்றுலா மாளிகை முன்பு இருந்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களிடம் வேனில் இருந்தபடி மனுவை மட்டும் வாங்கி சென்றார். இதனால் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைத்தனர்.
இதுகுறித்து மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், முதலமைச்சரை சந்தித்து மனு அளிப்பதற்காக இரவு 12 மணிக்கு புதிய பேருந்து நிலையம் வந்து ஆறு மணி நேரம் கொசுக்கடியில் படுத்து காலையில் முதலமைச்சரை பார்ப்பதற்காக வந்தோம். ஆனால் முதலமைச்சர் ஐந்து பேரை மட்டும் உள்ளே அழைத்து மனுவை பெற்றுக்கொண்டு உங்கள் பிரச்சினையை பேசி விட்டோம் போங்கள், போங்கள் என அனுப்பிவிட்டனர் என மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.