மேட்டூர் அணையில் கலக்கும் ரசாயன கழிவு நீர் - செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அச்சம்

மேட்டூர் அணையில் கலக்கும் ரசாயன கழிவு நீர் - செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அச்சம்
மேட்டூர் அணையில் கலக்கும் ரசாயன கழிவு நீர் - செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அச்சம்

மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கி கால்வாயில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர்

சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிட்கோ உள்ளிட்ட ஏராளமான ரசாயன தொழிற்சாலைகளும் அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் சுத்தம் செய்தபிறகு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். ஆனால் அதற்கான செலவு அதிகமாக இருப்பதால் தொழிற்சாலை உரிமையாளர்கள் ரசாயன கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே வெளியேற்றுகின்றனர். இந்த கழிவுநீர் நேரடியாக 16 கண் உபநீர் போக்கி கால்வாயில் கலக்கிறது.

செத்து மிதக்கும் மீன்கள் - பெருகும் நோய்கள்

இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் மேட்டூர் அணை நிரம்பி 16 கண் உபரி நீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு நிறுத்தும் பொழுது ரசாயன கழிவு நீர் கலப்பதால் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உபரி நீர் கால்வாயில் குளிப்பதாலும், துணி துவைக்க செல்வதாலும் தோல் நோய், சளி, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், ரசாயன கழிவுநீர் கலந்து உயிரிழந்த மீன்களை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் விற்பனைக்காக எடுத்துச் செல்வதால் அதனை வாங்கி உண்ணும் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

அச்சம் தெரிவிக்கும் பொதுமக்கள்

இதுகுறித்து தமிழக அரசும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தண்ணீரின் மாதிரிகளை எடுத்து மீன்கள் இறப்பதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரையோர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com