பேனா நினைவுச்சின்னத்திற்கு தடைகோரிய வழக்கு: அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பேனா நினைவுச்சின்னத்திற்கு தடைகோரிய வழக்கு: அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பேனா நினைவுச்சின்னத்திற்கு தடைகோரிய வழக்கு: அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளை பாதுகாக்கப்பட்ட கடலோர பகுதியாக அறிவித்து கடந்த 2016ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும், இந்த பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடல் அலைகள் மேலெழும்பும் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கட்டுமானங்களால் 2014 ஆம் ஆண்டில் 315, 2015ஆம் அண்டில் 89, 2016ஆம் அண்டில் 217, 2017ஆம் ஆண்டில் 278, 2018ஆம் அண்டில் 149, 2019ஆம் அண்டில் 329, 2020ஆம் அண்டில் 57, 2021ஆம் அண்டில் 88 ஆமைகள் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்பதால், மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் 42 மீட்டர் உயர பேனாவுடன் கூடிய நினைவிடம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், மெரினா கடற்கரையில் இனி யாருடைய உடலையும் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு, மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com