எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ? - மக்களின் நாடிக்கணிப்பு
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக ஊடகங்களும் கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய தலைமுறை சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் அதிமுக கூட்டணிக்கு 6-8 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், திமுக கூட்டணிக்கு 31-33 இடங்கள் கிடைக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் 5 மண்டலங்களாக நடத்தப்பட்ட கணிப்பில், எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்பதற்கு 41.90% திமுகவிற்கும், 27.07% அதிமுகவிற்கும், 4.71% அமமுகவிற்கும், 5.68% மக்கள் நீதி மய்யத்திற்கும், 4.19% நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிப்போம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று தமிழகத்தில் பிடித்த அரசியல் தலைவர் யார் ? என்ற கேள்விக்கு, 31.01% பேர் மு.க.ஸ்டாலினையும், 9.66% பேர் எடப்பாடி பழனிசாமியையும், 6.16% பேர் ஓ.பன்னீர்செல்வத்தையும், 5.54% பேர் சீமானையும், 4.65% பேர் கமல்ஹாசனையும் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் ? என்ற கேள்விக்கு 22.43% பேர் நரேந்திர மோடியையும், 53.20% பேர் ராகுல் காந்தியையும் தெரிவித்துள்ளனர்.