நாடாளுமன்ற தேர்தல் : தேமுதிக விருப்பமனு விநியோகம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் விருப்பமனுவை தேதிமுக நாளை மறுநாள் விநியோகம் செய்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அரசியல் நிலவரம் சூடிபிடித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி முடிவுகள் பரபரப்புடன் வெளியாகிக்கொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் விருப்ப மனுக்களை விநியோகம் செய்து, அதனை திரும்பவும் பெற்றுவிட்டன. ஆனால் தேமுதிக இதுவரையிலும் விருப்ப மனு விநியோகம் செய்யவில்லை. ஏனென்றால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் தமிழகம் திரும்பிய முதல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணிகள் அவர் தொடர் அழைப்புகளை விடுத்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் இன்னும் தேமுதிக பிடி கொடுக்கவில்லை. இதற்கிடையே தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்தை சந்தித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் இப்படி வேகத்துடன் சென்றுகொண்டிருக்க, விருப்பமனு விநியோகம் என்ற தகவலை தேமுதிக வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் தேமுதிக நாடாளுமன்ற தேர்தல் விருப்பமனு விநியோகம் நடைபெறுகிறது. விருப்பமனுக்களை வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதிகளுக்கான விருப்பமனு ரூ.20 என்றும், தனித் தொகுதிகளுக்கான விருப்பமனு ரூ.10 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.