மக்களவைத் தேர்தல் விருப்பமனுக்களை பெற்றார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை கட்சித் தலைவர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி, விருப்பமனுக்கள், பரப்புரைகள் என தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்து, தொகுதி பங்கீடையும் நிறைவு செய்யும் தருவாயில் உள்ளன.
அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. அதேசமயம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அக்கட்சியில் தலைவர் கமல் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 28ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிரப்பபட்ட விருப்பமனுக்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று பெற்றுக் கொண்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், கமல்ஹாசன் தங்களது தொகுதிகள் போட்டியிட பரிந்துரைத்தும் பலர் தங்கள் மனுக்களை அளித்தனர். குறிப்பாக ராமநாதபுரம், தென் சென்னை தொகுதியில் கமல் போட்டியிட பரிந்துரைத்து மனுக்களை அளித்தனர். மக்கள் நீதி மய்யத்தின் விருப்பமனுக்களை வழங்க நாளை கடைசி தினமாகும்.