ஒரு லட்சத்து 25 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம் - உதகை குளுகுளு
உதகையில் உலக புகழ் பெற்ற மலர்க் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலார் புரோகித் தொடங்கி வைத்தார்.
உதகையில் உள்ள சுற்றுலாப் பகுதிகளுள் முதன்மையானது பொடானிகல் கார்டன் எனப்படும் தாவரவியல் பூங்கா. இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 123ஆவது மலர்க் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம், 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கூடை, 15,000 பூந்தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை முழுவதும் விதவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மலர்கள் அனைத்தும் வாடாமல் இருக்க 5 மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கப்படுவதாக பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறும் மலர்க்கண்காட்சியை காண ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.