கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே 6 வயது சிறுவனை 15 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மன்னன் நகரை அடுத்த பள்ளிப்பட்டியில் வடிவேல் என்பவர் 6 வயது சிறுவனை ஆடு மேய்க்கும் தொழிலில்ஈடுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற அதிகாரிகள், ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர். 15 ஆயிரம் ரூபாய்க்கு சிறுவனை பெற்றோர் விற்றதும் சிறுவனை விலைக்கு வாங்கிய வடிவேல், ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்ட அதிகாரிகள், குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடிவேலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.