குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’
குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை குறைக்க ‘குட் டச்’, ‘பேட் டச்’ முறை குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.
ஒரு குழந்தையின் அனுமதி இல்லாமல் அதைத் தொட யாருக்கும் உரிமை இல்லை. தனது உடலுக்கு தானே உரிமையாளர் என்பதை முதலில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவசியம் ஆகும். குழந்தைகளை வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களில் 90% அறிமுகமானவர்கள்தான். எனவே குழந்தை பெற்றோரிடம் பேசத் தயங்கலாம். அதனால் குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பெரியவர்கள் சொல்வதற்கு எல்லாம் சரி எனச் சொல்ல வேண்டும் என்ற மனநிலை ஆபத்தானது. பிடிக்காதபோது, தவறாகத் தோன்றும்போது மறுப்பதற்கும் குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை கழுத்துக்குக் கீழே தொடுவதே தேவையற்ற தொடுதல்தான் என்பது மேலை நாடுகளின் எண்ணமாக உள்ளது. அப்படித் தொடும்போது எதிர்க்க குழந்தைகளை தயார் படுத்த வேண்டும்.
கண், காது, மூக்கு என உறுப்புகளின் பெயரைச் சொல்லிக் கொடுக்கும் போதே பிறப்பு உறுப்புகளின் பெயர்களையும், அவற்றின் பயன்பாட்டையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட பகுதிகளைத் தொட முயற்சிப்பவரிடம் குழந்தைகள், 'இது முறையற்றது தவறு - என்று சொல்லி எதிர்ப்பதோடு, அதை வீட்டில் வந்து பெற்றோரிடம் சொல்லவும் குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிச் சென்று வந்த பின்னும், விளையாடி விட்டு வந்த பின்னும் குழந்தைகளை கவனி்ப்பது அவசியமாகும். அவர்களின் அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்பதோடு அவர்களை குறை சொல்வதையும் தவிர்க்க வேண்டும். லிப்ட், படிகள் போன்ற இடங்களில் குழந்தைகளிடம் யாராவது நெருக்கமாகப் பழகுகிறார்களா, பரிசு தருவதாகக் கூறியோ, பயமுறுத்தியோ குழந்தைகளைக் கட்டுப்படுத்துகிறார்களா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
சந்தேகம் எழும் பட்சத்தில் குழந்தைகள் அச்சமடையாத வகையில் கேட்டறிதலும் அவசியமாகிறது. எளிதில் பயப்படுபவர்களாக அல்லாமல் தைரியமானவர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும். தைரியம் பாராட்டுக்கு உரியது என்பதைப் புரியவையுங்கள். பதட்டம் அல்லது சோகமாகக் குழந்தைகள் காணப்பட்டாலோ, உடலில் வித்தியாசமான காயம் அல்லது தழும்பு காணப்பட்டாலோ குழந்தையிடம் மென்மையாகப் பேசிக் காரணத்தை அறிய வேண்டும். எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பது பற்றி வாரம் ஒரு முறையாவது குழந்தையிடம் விளக்க வேண்டும். இது இருபாலருக்கும் பொதுவானது. பெற்றோர் பேசினால்தான் குழந்தைகள் பேசும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.