
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சோளக்காப்பட்டி கிராமத்தில் 70 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சகல வசதிகளுடன் அமைந்துள்ளது. கடந்த 1966 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் பள்ளியில் 2016ஆம் ஆண்டு வரை இரட்டை இலக்கங்களோடு மாணவர்களின் எண்ணிக்கை இருந்தது.
இந்நிலையில், சோளக்காப்பட்டி கிராமத்தில் உள்ள பலரும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி கல்வி பயில தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளதால் தற்போது மூன்று மாணவர்கள் மட்டுமே அரசு துவக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதில், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும் நான்காம் வகுப்பில் இரண்டு மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த 3 மாணவர்களின் மதிய உணவுக்காக பள்ளியில் மதிய உணவு கூடமும் செயல்பட்டு வருகிறது. இந்த மாணவர்களும் தடையின்றி கல்விகற்க பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் உடைகள் கல்வி உபரணங்கள் வாங்கித் தந்து உற்சாகமூட்டி வருகிறார்.
கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளி இயங்க வேண்டும் என்ற நோக்கில் அருகில் உள்ள கிராமங்களான வீரப்பன் கொட்டாய் ,பெருமாள் குப்பம், படப்பள்ளி ஆகிய பகுதிகள் அரசுப் பள்ளிகள் துவங்கியதால் அருகில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் சோளக்காபட்டி துவக்கப் பள்ளிக்கு மாணவர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பல திட்டங்களை அறிவித்து வழங்கி வருகிறது. அதில், விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுகள் புத்தகப்பை மடிக்கணினி, சீருடை இலவச காலணிகள் வண்ண பென்சில், மிதிவண்டி, கணித உபகரணப் பெட்டி, இலவச பேருந்து அட்டை, மதிய உணவு போன்றவைகள் அரசால் வழங்கப்படுகிறது. ஆனாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தே காணப்படுகிறது.
சோளகாப்பட்டி அரசு துவக்க பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஊத்தங்கரை பகுதியில் தனியார் பள்ளிகள் அதிகம் காணப்படுகிறது. அப்பள்ளிகளில் இரண்டு மாணவர்களை சேர்தால் ஒரு மாணவர்களுக்கு கல்வி இலவசம், பேருந்து இலவசம், என இலவசங்களை அறிவித்து வீட்டுக்கே சென்று மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இவற்றை தாண்டியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர் மற்றும் கல்வியாளர்கள் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.