அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்கள்
பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கமேடு அரசினர் நடுநிலைப்பள்ளிக்கு அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கும் புதுமையான நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கணினி பயன்பாட்டு பயிற்சி, ஆங்கிலத்தில் பேசுவது, ஓவியப்பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் தற்பொழுது 234 மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் 9 ஆசிரிய, ஆசிரியைகள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். எனவே கூடுதல் ஆசிரியர்களை நியனம் செய்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் எனத் தலைமை ஆசிரியை மாலதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் இப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் தாரை, தப்படையுடன் ஊர்வலமாக பள்ளிக்கு சென்று எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய கல்விச்சீரை வழங்கி ஆசிரிய, ஆசிரியைகளைப் பாராட்டினர். இந்தப் புதுமையான நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.