காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த போலீஸ் ஜோடி
பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பொம்மியம்பட்டி பழைய காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், ஆவடி போலீஸ் பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா, ஆவடி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு சென்னையில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் அனந்தகுமார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசியுள்ளார். மேலும், இருவரும் காவலர்கள் என்பதால், அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கையை பற்றி இருதரப்பு பெற்றோரும் பயப்படத் தேவையில்லை. அதனால, அவர்களின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டு அழைத்துச் செல்லுமாறு போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், காதல் திருமண ஜோடியை மாப்பிள்ளை வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். காவலர் காதல் ஜோடியே பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் காவல் நிலைய பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

