"பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார்" - மோடியிடம், தாய் சரோஜா நம்பிக்கை

"பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார்" - மோடியிடம், தாய் சரோஜா நம்பிக்கை
"பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார்" - மோடியிடம், தாய் சரோஜா நம்பிக்கை

பாரா ஒலிம்பிக்கில் இந்த முறையும் தங்கம் வெல்வார் என சேலம் மாரியப்பனின் தாயார் சரோஜா நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியுடனான காணொளி கலந்துரையாடலின் போது மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாக குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், சேலத்தில் உள்ள பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற வீரர், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இவர், உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி காணொளியில் கலந்துரையாடினார். பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த மாரியப்பன் பெங்களூருவிலிருந்தும், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் சொந்த ஊரான டேனிஷ்பேட்டையிலிருந்தும் கலத்துரையாடலில் பங்கேற்றனர்.

மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியிடம், தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், பிரதமரின் ஊக்கம் மற்றும் மத்தியஅரசின் உதவியோடு மீண்டும் தங்கப்பதக்கம் வெல்வேன் என்றும் மாரியப்பன் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து மாரியப்பன் குடும்பத்தினருக்கு தமிழில் வணக்கம் கூறி கலந்துரையாடலை தொடங்கிய மோடியிடம், மாரியப்பன் இந்த முறையும் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதாக கூறிய தாயார் சரோஜா, மாரியப்பனுக்கு கோழி சூப் உள்ளிட்டவைகளோடு ஊக்கத்தையும் அளித்ததாக பிரதமரிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடன் கலத்துரையாடியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், வரும் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாரியப்பன் மீண்டும் தங்கம் வென்று நாட்டிற்கும், பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்ப்பார் என்று சரோஜா நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com