சட்டப்பேரவையில் காரசாரமாக ஒலித்த என்பிஆர் விவகாரம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டும்.. அமைச்சரின்

சட்டப்பேரவையில் காரசாரமாக ஒலித்த என்பிஆர் விவகாரம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டும்.. அமைச்சரின்

சட்டப்பேரவையில் காரசாரமாக ஒலித்த என்பிஆர் விவகாரம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டும்.. அமைச்சரின்
Published on

எந்த ஒரு சமூகத்திற்கும் ஆபத்து ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்தும் ஆட்சியாக, இயக்கமாக அதிமுக இருக்கும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த விவாதத்தில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என எந்த ஒரு சமுதாய மக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை தடுத்து நிறுத்தும் இயக்கமாக, ஆட்சியாக அதிமுக இருக்கும் என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்து என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரம் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என பீகார், ஆந்திரா, உள்ளிட்ட பல மாநிலங்கள் முடிவெடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும், அதேபோன்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய ஸ்டாலின், என்பிஆர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என்றும், அந்த கடிதத்திற்கு மத்திய அரசு ஏதாவது பதிலளித்து இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவருடைய கோரிக்கையை ஏற்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், “தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதில் உள்ள மூன்று கேள்விகள் தொடர்பாக மக்கள் அச்சமடைந்து இருப்பதாகவும், எனவே அதற்கு விளக்கம் வேண்டும் என்றும் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அதற்கு தற்போதுவரை பதில் வரவில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் செயல்பாட்டுக்கு வராதபோது, இப்போது அது குறித்து அச்சப்படத் தேவை இல்லை. சிறுபான்மை மக்களை காக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும். வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரக்கூடிய இஸ்லாமிய மக்கள், அதன் தலைவர்கள் ஏற்கெனவே முதலமைச்சரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சட்டங்கள் எல்லாம் காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின், “2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது உண்மைதான். ஆனால் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தில் பிறந்த தேதி, தாய் மொழி உள்ளிட்ட எந்தவொரு விவரங்களும், ஆவணங்களும் கேட்கப்படவில்லை. ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இதுபோன்று பல்வேறு ஆவணங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை திமுக எதிர்க்கவில்லை. எனவே தீர்மானம் கொண்டு வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” எனக் கேள்வி எழுப்பினார்.

மீண்டும் பதிலளித்து பேசிய அமைச்சர் உதயகுமார், “சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தால், அது இந்திய அரசு அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும். மக்களை ஏமாற்றும் தீர்மானமாக மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர அரசு விரும்பவில்லை. உணர்வுபூர்வமாக இஸ்லாமிய மக்களுக்கு அரணாக அதிமுக அரசு இருக்கும்” எனத் தெரிவித்தார். இந்த விவாதத்தில் தமிமுன் அன்சாரி, அபூபக்கர் ஆகியோரும் தீர்மானம் நிறைவேற்றக்கோரி வலியுறுத்தி பேசினர். இதைத்தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தின் போது கூச்சல் குழப்பம் அதிகரித்ததால், குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால், தங்கள் விருப்பப்படி அமைச்சர் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பது சரியல்ல என்றும், இதற்கு மேல் இந்த விவாதத்தை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com