சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் பன்னீர்செல்வம்

சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் பன்னீர்செல்வம்

சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் பன்னீர்செல்வம்
Published on

மக்களோடு தொடர்பு‌ கொண்டு அவர்களின்‌ மனநிலையை அறிந்து அதற்கு ஏற்ப செயல்‌பட‌ அரசியல் தலைவர்களுக்கு உறுதுணையாக‌ இருக்கின்றன சமூக ஊடகங்கள். சமூக ஊடகங்களின் தாக்கம் எத்தகையது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அந்த வகையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது அவரது ஆதரவாளர்களைக் கொண்ட தொழில்நுட்ப‌குழு.

கடந்த செவ்வாய்கிழமை இரவு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டிக்குப் பிறகு, அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படி முதலமைச்சர் இல்லத்திற்கு வந்து ஆதரவு தெரிவிப்போரின் குரல்களை சமூக ஊடகங்களிலும் எதிரொலிக்க செய்ய பன்னீர்செல்வம் தரப்பு தொழில்நுட்ப பிரிவை உருவாக்கியுள்ளது.

முதலமைச்சர் இல்லத்தில் தொழில்நுட்ப பிரிவினர் இப்படி லேப்டாப்களுடன் அமர்ந்து, ஆதரவாளர்களின் விவரங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் வாட்ஸ் அப் குரூப்கள் உருவாக்கப்பட்டு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் பகிரப்படுகின்றன. இது போக ஆதரவாளர்களை மைக்கில் பேச வைத்து அவற்றை பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்புகின்றனர்.

முதலமைச்சராக பன்னீர்செல்வம் மாநில பிரச்னைகளை எப்படி கையாண்டார் என்பன போன்ற விவரங்களையும் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக பரவச் செய்து ட்ரெண்டாக்குவதும் இவர்களின் பணிகளில் ஒன்று. இதற்காக 6 பேர் தொழில்நுட்ப பிரிவில் செயல்பட்டு வருகின்றனர்.

பல வாட்ஸ் அப் குரூப்கள் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் தொடர்ச்சியாக நிகழ்வுகளை அப்டேட் செய்கின்றனர். i support ops என்பன போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதில் அவருக்கு ஆதரவானவர்களின் பதிவுகளை வெளியிடுகின்றனர். விரைவில் பன்னீர்செல்வத்திற்கு என தனிப்பட்ட சமூக வலைதள பக்கங்களை உருவாக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com