“காதல் திருமணமா..பையன் வீட்டுக்கு ரூ40,000, பொண்ணு வீட்டுக்கு 10,000” பஞ்சாயத்தில் அபராதம்
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு அபராதம் விதித்த பஞ்சாயத்தார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிழ்பள்ளிபட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருடைய மகன் ஜீவானந்தம். இவரும் சின்ன கொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மகள் பவானி என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதனையறிந்த நாகராஜ் பவானிக்கு வேறொரு இடத்தில் திருமணம் நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனையறிந்த ஜீவானந்தம் பவானியை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து அவர்களை விசாரித்த பஞ்சாயத்தார்கள் செல்வராஜ், கமலக்கண்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் ஜீவானந்தம் மற்றும் பவானி ஜோடிக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஜீவானந்தம் இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் முன்னதாக காதல் திருமணம் செய்த கொண்ட தம்பதியின் பெண் வீட்டாருக்கு 5 ஆயிரம் ரூபாயும், மாப்பிள்ளை வீட்டாருக்கு 8.000 ரூபாயும் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது எங்கள் தரப்புக்கு 40,000 ரூபாயும், பெண் வீட்டாருக்கு 10,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாங்கள் 5 ஆயிரம் வட்டிக்கு 20,000 ரூபாய் பணத்தை வாங்கி பஞ்சாயத்திரிடம் செலுத்தினோம். அதனை வாங்கிக்கொண்ட அவர்கள் மீதமுள்ளப் பணத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர். உடனே கூலி வேலை செய்யும் நாங்கள் எப்படி அவ்வளவு பணத்தை தர இயலும் எனக் கேள்வி எழுப்பினோம். உடனே எங்களை அவர்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதாக அறிவித்தனர்” என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் கீழ்பள்ளிப்பட்டு ஊர் பஞ்சாயத்து தாரர்கள் செல்வராஜ் மற்றும் கமலக்கண்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் செல்வராஜ் மற்றும் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள சண்முகத்தைத் தேடி வருகின்றனர்.