நெல்லை, பாறைப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாறைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"எங்கள் கிராமத்தில் 3 சமூகத்தை சேர்ந்த தலா 250 குடும்பங்கள் என 750குடும்பங்கள் உள்ளன. இங்கு 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதில் ஒரு தொட்டிலிருந்து 2சமூகத்தினருக்கும், மற்றொருதொட்டியிலிருந்து ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து யாருக்கும் தண்ணீர் வழங்கவில்லை. தற்போது இரு சமுகத்தினருக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட சமூகத்தினருக்கு தண்ணீர் வழங்குவதில்லை.
மேலும் ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் தெருவிளக்குகள், சுகாதார வசதிகள் செய்யப்படுவதில்லை.இந்தச் சாதி பாகுபாடுக்கு எதிராகவும், ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தக்கோரியும் உயர்நீதிமன்ற கிளையில் வழக்குதொடர்ந்தேன். அந்த வழக்கில் 2 வாரத்தில் குடிநீர், தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்த நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ஆனால் இதுவரை நெல்லை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. இதுபற்றி கேட்டதற்கு கிராமத்தை விட்டு வெளியேறும் வரை எந்த வசதியும் செய்து தர முடியாது என ஊராட்சி உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம், வாசுதேவநல்லூர் ஊராட்சியின் திட்ட மேம்பாட்டு அலுவலர் முருகைய்யா,கிராம பஞ்சாயத்து எழுத்தர் இலக்குவன் ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஜாதி பாகுபாடு இல்லாமல் அடிப்படை வசதிகளை செய்ய ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும்'" என மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால் அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.