பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம்
பாம்பன் பாலத்துக்கு பதிலாக, ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் 104 வருட பழமையானது. 1914 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த பாலம், 2006-ல் அகல பாதையாக மாற்றப்பட்டது. சமீபத்தில், இதன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத் துடன் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், பாம்பன் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடி செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன. இப்போது இருக்கும் பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் இந்தப் பாலம் கட்டப்படுகிறது.
இதில் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்லலாம். தூக்கு பாலம், தானியங்கி முறையில் செங்குத்தாக திறந்து மூடும் வகையில் கட்டப்பட இருக்கிறது. புதிய பாலம் இரட்டை ரயில் பாதையாக அமைகிறது. இதன் கட்டுமான பணி அடுத்த மாதம் தொடங்குகிறது.