சக மாணவிகள் கிண்டல் செய்ததால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பல்லாவரத்தில் நிகழ்ந்துள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்து திருநீர்மலைப் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாம்பரம் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சக மாணவிகள், திவ்யாவை உடல் பருமனாக இருப்பதைக்கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் திவ்யா மனமுடைந்துள்ளார். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். அத்துடன் தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
திவ்யாவின் பெற்றோர் பள்ளிக்கு சென்று, ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் திவ்யாவை வேறு வகுப்பிற்கு மாற்றுவதாகக் கூறியுள்ளனர். ஆனால் திவ்யா வேறு வகுப்பிற்கு மாற்றப்படவில்லை. அத்துடன் முன்பு போலவே திவ்யாவை சக மாணவிகள் கிண்டல் செய்யும் அவலம் தொடர்ந்துள்ளது. அத்துடன் சக மாணவிகள் திவ்யாவிடம் பேசுவதையும் குறைத்துவிட்டனர். இதனால் விரக்தியின் எல்லைக்கு திவ்யா சென்றுள்ளார். இதுதொடர்பாக தனது தாயாரிடம் மீண்டும் புலம்பியுள்ளார். அவர் ஆறுதல் கூறிவிட்டு, எல்லாம் போகபோக சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது, விரக்தியில் திவ்யா சமையலறையில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பலத்த தீக்காயம் அடைந்த திவ்யா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருநீர்மலை, சங்கர்நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல; மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.
(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)