திருச்சி அருகே பல்லவன் விரைவு ரயிலின் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
காரைக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை மார்க்கமாக சென்றுக்கொண்டிருந்த பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே விபத்துக்குள்ளானது. இந்த ரயில் காரைக்குடி - சென்னை இடையே தினசரி இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு பகல் 12:20க்கு சென்னை சென்றடையும். திருச்சி பொன்மலை அருகே கிராப்பட்டியில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகளுக்கு எதும் காயம் ஏற்படவில்லை. பல்லவன் ரயிலின் என்ஜினை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 6.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வரவேண்டிய பல்லவன் ரயில் கிராப்பட்டியில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருச்சியில் பல்லவன் விரைவு ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை- சென்னை செல்லும் வைகை ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் இன்டர் சிட்டி, திண்டுக்கல், ராமேஸ்வரம் பயணிகள் ரயிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.