பழனியில் சர்வசாதாரணமாக நடந்த துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?
பழனியில் இடத்தகராறு காரணமாக பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயியான இவருக்கு, பழனி அப்பர் தெருவில் 12 செண்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்திற்கு அருகே தொழிலதிபர் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார்.
இளங்கோவன் இடத்தில் தனக்கும் சொந்தமான நிலமும் இருப்பதாக தொழிலதிபர் நடராஜன் தெரிவித்து வந்துள்ளார். வழக்கு கோர்ட்டில் இருந்த நிலையில் இளங்கோவனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று, இளங்கோவன் தன்னுடைய இடத்தில் வேலி அமைக்கச் சென்றபோது அவருடைய இடத்திற்கும் நுழையக்கூடாது என்று தொழிலதிபர் நடராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இளங்கோவனின் உறவினர்களான பழனிசாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் நடராஜனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆவேசமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் சுப்பிரமணியின் வயிற்றிலும், பழனிச்சாமியின் இடுப்பிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தொழிலதிபர் நடராஜன் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளங்கோவன் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து விரைந்த வந்த பழனி டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தியதோடு தப்பியோடிய நடராஜனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நடராஜன் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருக்கு சொந்தமானது என்பதும், அந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியின் உடலில் இருந்து தோட்டாவை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்று வருகிறது. அறுவை சிகிச்சை முடிந்து பின்புதான் அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட தொழிலதிபர் நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்த பழனி நகர் போலீசார், அவரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையிலடைத்தனர்.