பழனி முருகன் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பாக, கோவில் நிர்வாகத்திடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினார். கடந்த 2004ஆம் ஆண்டு உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஸ்தபதி முத்தையா, பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலையில் வெள்ளி உலோகம் சேர்க்கப்படவில்லை என்றும், 200 கிலோவுக்கு பதிலாக 221 கிலோவில் சிலை செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் மேலாளர் உமா ஆகியோரிடம் ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினார். 2004ஆம் ஆண்டு பணியில் இருந்த அதிகாரிகள் குறித்த கோப்பையும் ஆய்வு செய்தார். ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பழனியில் 2 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்த உள்ளார்.