பழனி முருகன் கோயில் பணியாளர்கள் ஆறு பேர் தற்காலிக பணிநீக்கம்
பழனி முருகன் கோயில் பணியாளர்கள் ஆறு பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து வின்ச் மற்றும் ரோப்கார் சேவையை பயன்படுத்தியும், படிபாதை வழியாகவும் பக்தர்கள் மலைமீது சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் பக்தர்களை ஏமாற்றி, விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி பணம் பறிக்கும் சம்பவம் அதிகமாக நடைபெறுவதாக இந்துசமய அறநிலைய துறைக்கு புகார்கள் வந்தன. பக்தர்களின் புகாரைத் தொடர்ந்து பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் திடீரென ஆய்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட கோயில் ஊழியர்கள் கார்த்தி, ஜெகன், ரங்கசாமி, கணேஷ், சுரேஷ், செந்தில் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து பக்தர்களை ஏமாற்றும் விதமாக கோயில் ஊழியர்கள் செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இணை ஆணையர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.