பாலமேடு ஜல்லிக்கட்டு|பரிசுகளை தட்டித்தூக்கியது யார்?
தைத்திங்கள் இரண்டாம் நாளில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டையொட்டி மாடுகளுக்கும், வீரர்களுக்கும் பரிசோதனைகள் நடைபெற்றன. காலை 7.50 மணிக்கு மேல் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 400 காளையரும், 930 காளைகளும் களமிறங்கின.
ஒவ்வொரு சுற்றிலும் அனல் பறந்தது என்று சொல்லும் அளவுக்கு ஜல்லிக்கட்டு களத்தை காளையரும், காளைகளும் அதிர வைத்தன. போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு வெளியேயும் பரபரப்பு நிலவியது. நுழைவு வாயில் வழியாக காளைகள் வந்தபோது சில திடீரென கூட்டத்துக்குள் ஓடின.
அந்த காளைகளை பிடிக்க பார்வையாளர்கள் முயற்சி செய்தனர். மேலும் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க நேர்ந்தது. காவல்துறை வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்பட்டனர். மொத்தம் 12 சுற்றுகளாக போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேரம் கருதி 9 ஆவது சுற்று இறுதிச்சுற்றாக அறிவிக்கப்பட்டது.
8 சுற்றுகளில் வெற்றி பெற்ற வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். மாலை நான்கே கால் மணிக்குத் தொடங்கி ஒருமணிநேரத்தை கடந்தும் இறுதிச்சுற்று நீடித்தது. வாடிவாசலில் காளைகள் சீறிப்பாய்வதும், வீரர்கள் அவற்றை பாய்ந்து தழுவி அடக்க முயல்வதுமாக இறுதிச்சுற்று மிக விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல், இரண்டாம் பரிசு!
14 காளைகளை அடக்கிய நத்தம் பார்த்திபன் முதலிடத்தை பிடித்தார். 12 காளைகளை பிடித்த மஞ்சம்பட்டி துளசி 2 ஆவது இடத்தையும், 11 காளைகளை பிடித்த பொதும்பு பிரபாகரன் 3 ஆவது இடத்தையும் பிடித்தனர். முதலிடம் பிடித்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை அடக்கிய துளசிக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல 11 காளைகளை அடக்கி பொதும்பு பிரபாகரனுக்கும் இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டின் இறுதிகட்டத்தில் விழா கமிட்டியிடம் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருவதற்குள் பரிசுகள் அறிவிக்கப்பட்டதால் இந்த வாக்குவாதம் நேரிட்டதாக தெரிகிறது. அமைச்சர் வந்ததும் காளை உரிமையாளர்களுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
சத்திரப்பட்டி விஜய தங்க பாண்டியன் காளை, சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டு முதல் பரிசாக முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான இரண்டாவது பரிசை வென்ற சின்னப்பட்டி கார்த்திக் என்பவரின் காளைக்கு, பொன்குமார் என்ற ஆர்வலர் நாட்டுப்பசுவுடன் கூடிய கன்றை பரிசாக வழங்கினார். சிறந்த காளைக்கான மூன்றாவது பரிசு பெற்ற குருவித்துறை பவித்ரன் என்பவரின் காளைக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாலமேடு ஜல்லிக்கட்டில் 24 மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் 16 பேர் உட்பட 51 பேர் காயம் அடைந்தனர்.