தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்
உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேட்டில் சமூக நல்லிணக்கத்திற்காக அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடங்கிய பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்றில் நடைபெற்று வரும் போட்டியில் 958 காளைகளுடன் மோதுவதற்காக 845 வீரர்கள் களத்தில் உள்ளார்கள்.
முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்த வண்ணம் உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக 1500 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிப்பதற்காக, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 மருத்துவர்கள், 75 மருத்துவ உதவியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் ஐந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காளைகள் கீழே விழுந்தால் காயம் படாமல் இருக்க வாடிவாசலிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு தேங்காய் மஞ்சி தூவப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். மேலும் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஆம்னி கார், இருசக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, கட்டில், பிரோ, அண்டா, பட்டு புடவை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

