பாளையங்கோட்டையில் பாழடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள்..!
பாளையங்கோட்டை ஊரின் பெயர் காரணமாய் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை இன்று பராமரிப்பின்றி பாழடைந்து கிடப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதிக்கு அந்த பெயர் வர காரணமாய் அமைந்ததே அப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகள்தான். பிரிட்டிஷ் காலத்தில் கோட்டையை கைப்பற்றி பின்னர் ஆயுதகிடங்காகவும், சிறைச்சாலையாகவும் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
மேற்கு கோட்டையிலிருந்து தற்போது அரசு அருங்காட்சியகம் இயங்கும் கிழக்கு கோட்டை வரையிலும், தெற்கே வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள பகுதிக்கும் சுரங்கபாதை இருந்ததாகவும் வரலாறு தெரிந்தவர்கள் கூறுகின்றனர். பாளையங்கோட்டையின் மத்தியில் அமைந்திருக்கும் ஆயிரத்தம்மன் கோயிலை மையமாக கொண்டு ஒரு வட்டம் அமைத்தால் சுற்றி நான்கு திசைகளிலும் சம தூர அளவில் கோட்டைகள் உண்டு.
மேற்கு கோட்டை மேல் ஏற கல்படிகள் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாற்பது படிகள் மேல் ஏறி சென்றால் கோட்டை மேற்பகுதி விசாலமாக பரப்பில் விரிந்து காணப்படுகிறது. சுதந்திர போராட்ட காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பியான ஊமைத்துரையை கைது செய்து வைத்த கோட்டை இதுதான்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரை "மேடை காவல்நிலையம்" என்ற பெயரில் குற்றப்பிரிவு காவல் அலுவலகம் இயங்கி வந்தது. ஆனால் இன்று கோட்டையின் மேல்பகுதியில் உள்ள சுண்ணாம்பு கட்டடம் சேதமாகி காணப்படுவதால் அரசு அலுவலகம் ஏதும் இங்கு இப்போது செயல்படவில்லை. ஆள்நடமாட்டமோ, பராமரிப்போ இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நெல்லை மாநகர பகுதிக்குள் இன்றும் பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கும் நிலையில் பழமைகளை பாதுகாத்து மாற்று ஏற்பாடுகள் செய்தால் வரலாறும் வாழும் ! வாடகை செலவின்றி வருமானமும் சேமிப்பாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.