26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் யார் யாருக்கு விருது?

26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் யார் யாருக்கு விருது?
26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் யார் யாருக்கு விருது?

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் ஓ.ஆர்.எஸ்.கரைசலை கண்டுபிடித்த இவர் உலகம் முழுவதும் போற்றுதலுக்குரியவராக இருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்கையோடு பாரம்பரிய முறைப்படி பாம்புகளை பிடிக்கும் இவர்கள் உலகம் முழுவதும் பல சவாலான இடங்களில் பாம்புகளை பிடித்து அசத்தியுள்ளனர்

இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரம், பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், ஆர்ஆர்ஆர் திரைப்பட இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு உயிரிழந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா, பிரபல தபலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கும் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடைபெறும் விழாக்களில், இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com